கலசபாக்கம் அருகே சிறு கிளாம்பாடி கிராமத்தில் டெய்லர் வெட்டிக்கொலை...
கலசபாக்கம் அருகே தகராறில் டெய்லர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவன் - மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
டெய்லர் வெட்டிக்கொலை
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சிறுகிளாம்பாடி காலனியை சேர்ந்தவர் துரைக்கண்ணு (வயது 44), டெய்லர்.
இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் துரை என்பவருக்கும் நிலம் வாங்குவது சம்பந்தமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது ஆத்திரம் அடைந்த துரை, அவரது மனைவி தீபா மற்றும் துரையின் தந்தை முனுசாமி ஆகியோர் சேர்ந்து துரைக்கண்ணுவை உருட்டு கட்டையால் தாக்கி கத்தியால் வெட்டி உள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கணவன் - மனைவி உள்பட 3 பேர் கைது
இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரை, தீபா மற்றும் முனுசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகராறில் டெய்லர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாவட்ட செய்தியாளர் ராமதாஸ் திருவண்ணமலை
No comments:
Post a Comment